ள்ளி இறுதி வகுப்புகளை முடித்து, கல்லூரிக்குள் எதிர்காலக் கனவுகளைச் சுமந்தபடி நுழைகிற இளைஞர்களுக்கு அக ஒருங்கிணைப்புக் கருத்தரங்கை நடத்தியாக வேண்டிய தேவை. எந்த எந்தப் பொருண்மைகளில் அமர்வுகளை நடத்துவது? என்ற வினாவையே முதன்மையாகக் கொண்டு நடந்தது அந்தக் கல்லூரி மேலாண்மையினரின் திட்டமிடல் கூட்டம்.    
Advertisment
இன்றைய கல்வித்துறையின் வளர்ச்சி, எதிர்கால வாய்ப்புகள் குறித்த சிந்தனைகளை விதைக்கக்கூடிய ஒரு கல்வியாளரை அழைக்கவேண்டும்
வரலாறு என்பதே அடிப்படை. எனவே வரலாற்றைச் சுருக்கமாகவும், சுவையாகவும் பந்திப்பரிமாற்றம் செய்கிற ஒரு வரலாற்றியல் ஆய்வாளர் வந்தாகவேண்டும்.
Advertisment
தலைமைத்துவமும், ஆளுமையும் பொதிந்தவர்களாக இளையோரை வார்ப்பிக்கிற ஒரு மென்திறன் பயிற்சியாளர் வரவேண்டும்.
அவசியமாக மாணவர்களோடு ஒரு மருத்துவர் பேசியாக வேண்டும்
அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்த செய்திகளை, தகவல்களைப் பரிமாறிக்கொண்டே அத்துறைகளில் அவர்களை ஆர்வத்தோடு இழுத்துச்செல்லும் ஒரு நிபுணர் வரவேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒழுக்கத்தைச் சொல்லித் தருகிற ஒரு ஆளுமையாளர் நம் மாணவர்களோடு இருந்தாக வேண்டும்.
…………இப்படி பட்டியல் நீண்டுகொண்டே இருந்தது. பொருண்மைகள் சரி.  இவற்றைப் பகிர்வதற்கு யார் யாரை அழைக்கலாம்? இது அடுத்த வினா.
இந்த வினாவிற்குப் பதில் சொல்ல எழுந்த ஒருவர்,“சில மேற்கோள்களைக் குறிப்பிடுகிறேன். அந்த மேற்கோள்களை நீங்கள் உள்வாங்கியபிறகு, அந்தக் கருத்துக்களை எங்கிருந்து பெற்றேன் என்கிற தகவல்களைச் சொல்கிறேன். 
நீங்கள் ஏற்றுக்கொண்டால் அவர்களையே அழைக்கலாம்! என்றவர், சில மேற்கோள்களைப் பட்டியலிட்டார். 
“நூறு இளைஞர்கள் கிடைத்தால் உலகையே மாற்றிக் காட்டுகிறேன் என்றவர் சுவாமி விவேகானந்தர் என்பது நமக்குத் தெரியும் அவர் தேடிய இளைஞர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும்? தெரியுமா? குறித்துக் கொள்ளுங்கள். இரும்பு போன்ற எலும்புகளோடும், எஃகு போன்ற நரம்புகளோடும் நூறு இளைஞர்கள் கிடைத்தால் உலகையே மாற்றிக் காட்டுகிறேன் என்பதே சுவாமி விவேகானந்தரின் வாக்கு.”
“மனிதன் விரிவாகச் சிந்திப்பதற்கு மொழி என்கின்ற சாதனம் அவன் கைகளில் கிடைத்தது முக்கியமான காரணம்”
“குதிரைகள் பயந்தாங் கொள்ளிகளைத் தங்கள் மேல் சவாரி செய்ய அனுமதிப்பதேயில்லை. துணிச்சல் உள்ளவர்களைத்தான் தூக்கிக் கொண்டாடுகிறது”
“ஓர் ஆணையால் வருகிற தலைமைப்பண்புக்கும், தானாக மலர்கிற தலைமைப்பண்புக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. 
அதாவது தடியால் அடித்துக் கனிகிற கனிக்கும், தானாகப் பழுக்கிற கனிக்கும் வேறுபாடு இருக்கிறதே அதுபோல!”
“உடலைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதும் மிக முக்கியம். ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவைச் சாப்பிடவேண்டும். அயர்ச்சி ஏற்படாமல் இருப்பதற்கு உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியம்.” 
“தடை என்பது எப்போதும் வெளியே இருப்பதல்ல. அது நம் மனத்தில்தான் உண்டாகிறது. ஒன்று முடியாது என்று நாம் முடிவு செய்துவிட்டால் மற்றவர்கள் எவ்வளவு உற்சாகப்படுத்தினாலும் நாம் ஒத்துழைக்க மாட்டோம்.”
 “நேரத்தை உருவாக்குகிற கலையை நான் உங்களுக்குச் சொல்லித் தருகிறேன். தயவுசெய்து, பல் துலக்குகிறபோது பல்லை மட்டும் நினையுங்கள். மற்றதைப்பற்றி சிந்திக்க வேண்டாம்.”
வியந்துபோனது கல்லூரி மேலாண்மையினர் குழு. அந்தந்தத் துறைகளில் ஆளுமையானவர்களாலேயே இதுபோன்ற ஆகச்சிறந்த கருத்துக்களை முன்மொழிய இயலும். அவர்களின் பெயர்களைச் சொல்லுங்கள். அவர்கள் அனைவரையும் நாமும் அழைக்கலாம் என ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. 
மேற்கோள்களை முன் மொழிந்த நண்பர் புன்னகைத்த படியே சொன்னார்“இந்த மேற்கோள்கள் பல்வேறுபட்ட அறிஞர்களின் உரைகளிலிருந்தோ, நூல்களிலிருந்தோ, சந்திப்புகளிலிருந்தோ பெறப்பட்டவை அல்ல. கடந்த 16 நாள்களாக நான் வாசித்துக் கொண்டிருக்கிற, நான்கு தொகுதிகளாக வந்திருக்கிற ஒரு நூலில் இருந்து எடுக்கப்பட்டவை’ என்றார். 
அவர் அவ்வாறு சொல்லி முடித்தபோது கேட்டவர்களின் புருவம் நெற்றியைச் சுருக்கி, ஏறக்குறைய அவர்களின் தலைமுடியைத் தொட்டிருந்தது.
ஆம். அந்த நூல் தமிழ்நாடு அரசின் மேனாள் தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ். அவர்களின் நூல்தாம். தம் ஓய்வுக்குப்பிறகு ஓராண்டு மூன்று மாதங்களில் தமிழ்நாட்டிலும், அயலகங்களிலும் பல அரங்குகளில் அவர் பேசிய 250க்கும் மேற்பட்ட உரைகளிலிருந்து 101 உரைகளைத் தொகுத்து இறையன்பு ஓராண்டு உரைகள் என்னும் நான்கு தொகுதிகள் அடங்கிய நூலை வெளியிட்டு ஒரு வரலாற்றுக் கடமையை நிறைவு செய்திருக்கிறது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம். 
பள்ளிப் பருவத்தைக் கலைக்களஞ்சிய அனுபவமாக ஆக்கிக் கொள்ள அலைபாயாத மனம், கலையாத கவனம், நீடித்த வாசிப்பு, நிலையான பயிற்சி, தொடர்ந்த முயற்சி, தொலைந்த அயர்ச்சி என்கிற ஆறு கூறுகளையும் அகவயப்படுத்திக் கொள்ளச் சொல்லிக் கொடுக்கும் கருத்துக்கள் அடங்கிய முதல் உரையோடு தொடங்கும் இந்த நூல் ஒவ்வொரு நாளையும் புதிய பிறப் பாக எண்ணி, புத்துணர்ச்சியுடன் படித்து, புத்துலகைப் படைக்க வேண்டும் என்று இளையோருக்கு அழைப்பு விடுக்கும் 101-வது உரையோடு நிறைவுபெறுகிறது. 
1790 பக்கங்களில் உள்ள 101 உரைகளையும் வாசித்து, அதிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளை வைத்துக்கொண்டு சுற்றத் தொடங்கினால் உலக அரங்கையே ஒரு சுற்று சுற்றி வந்து விடலாம். ஒரு கட்டற்ற அறிவுக்களஞ்சியமாக நம் எல்லோரிடமும் இருக்கவேண்டிய நூல் என்றால் அது  மிகையானதாகாது.
நம் ஐந்து விரல்களும் சமமாக இருந்தால் எப்படி இருக்கும்? என ஒரு வினா எழுந்தால் நம் பதில் என்னவாக இருக்கும்? பார்வைகளால் தனித்துவமாகத் தம்மை அடையாளப்படுத்தும் இறையன்பு, விரல்களின் தனித்துவத்தைச் சுழற்சங்கத் தோழர்களிடம் சிலாகித்துச் சொன்னபோது சார்லஸ் டார்வினின் கோட்பாடுகள் தொடங்கி சந்திராயன் வளர்ச்சி வரையிலான மனித முயற்சிகள் நம் முன்னே வந்துபோகின்றன. அந்த வினாவிற்கு இப்படி பதில் சொல்கிறார். “நம் ஐந்து விரல்களும் சமமாக இருந்தால் நம் கைகளும் சிம்பன்சிபோலத்தான் இருந்திருக்க முடியும். வெவ்வேறு வடிவத்திலும், வெவ்வேறு நீளத்திலும் இருப்பதால்தான் விரல்கள் பயன்படுகின்றன. இந்த விரல்களால் காகிதத்தை மடக்க முடியும்; கணினியை இயக்க முடியும்; களைக்கொட்டை பயன்படுத்த முடியும்; கத்தியால் அறுக்க முடியும்; கவிதையை வடிக்கமுடியும்; கைத்துப்பாக்கியை இயக்க முடியும்; காரை ஓட்ட முடியும்; காவியம் படைக்க முடியும்; கால்களைச் சொறிய முடியும். இத்தனைக்கும் இந்த விரல்கள் பயன்படுவதற்கு வெவ்வேறு நீளங்களாக இருப்பதுதான் காரணம்’ என விளக்கிவிட்டு மூடிய கைகளுக்கும், திறந்த கைகளுக்குமான நிலையை மனித மனத்தோடு ஒப்பிட்டுச் சொல்லும்போது டார்வின் மறைந்து சிக்மண்ட் ஃப்ராய்ட் எட்டிப்பார்க்கிறார்.
சுந்தரராமசாமி குறிப்பிட்ட புதுமைப்பித்தனின் செல்லம்மா கதை யைத் தாம் பார்த்த தஞ்சாவூர் தம்பதியினரோடு பொருத்தி உண்மைக்காதலை அவர் எடுத்துச் சொல்லும்போது நம் கண்களும் பனிக்கின்றன. 
பாரதிதாசனின் குடும்ப விளக்கு மேற்கோளாகி மனத்தை அன்பால் ஆற்றுப்படுத்தும் பக்கத்திற்கு அடுத்த பக்கத்தில் ‘நிகோமேஷியன் எதிக்ஸ் என்ற நூலில் அரிஸ்டாட்டில்  குறிப்பிடும் மூன்றுவகை நட்பை அனுபவச் சான்றுகளோடு புரிய வைக்கும்போது அவரின் பரந்த வாசிப்பு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. 
சென்னை மாநிலக் கல்லூரியில் ஆற்றிய உரை மாநிலக் கல்லூரி வரலாற்றின் மணிமகுடம். அந்தக் கல்லூரியின் அத்துணை வரலாற்றையும் ஆய்ந்து அவர் சென்றிருப்பது ஒரு பேச்சாளர் தம் உரையை எப்படித் தயாரிக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டு கிறது.
ஒழுக்கம் இல்லாதவன் கல்வியின் அருமையை ஒருபோதும் உணர மாட்டான். அது வெறும் அலங்காரப் பொருளாக இருக்குமே தவிர, பயன்பாட்டுப் பொருளாக இருக்காது எனச் சத்தியமிட்டு ஆற்றிய உரை வளாகத்தை அமுதசுரபியாக, அட்சய பாத்திரமாக உணர போதனை செய்கிறது. சத்தான உணவு, தக்கை உணவு தவிர்ப்பு, கச்சிதமான உடற்பயிற்சி ஆகியவற்றில் செலுத்தும் கவனம் போதி மரத்தடியில் புத்தர் பெற்ற ஞானத்தைப் பெற வழிகாட்டும் கலங்கரை விளக்காகிறது.
‘இசை’ குறித்துப் பேசத்தொடங்கும் பொழுதில் வள்ளுவன் கரம் தொட்டு, புகழேந்திப் புலவரின் தோள்தட்டி, பாரதியைப் பக்கத்தில் அழைத்து, ஜேன் ஸ்வான், பித்தோவன், டால்ஸ்டாய், லாங்ஃபெல்லோ கடந்து, எஸ்.ரா கூறும் மங்கோலியக் குறும்படக் கதைசொல்லி, கன்பூசியஸ் பாதத்தில் நம்மை அமர வைத்தபோதுதான் இசையில் கரைந்து போகவேண்டுமென்கிற சூட்சுமமே நமக்குப் புரிகிறது.  
வாசிப்பே தன் குரல் - வாசிப்பே தன் திறன் - வாசிப்பே தன் செயல் என உணர்த்தும் இறையன்பு, வாசிப்பால் யாரும் ஏழையானதில்லை என உரத்துச் சொல்லி, உள்ளத்தில் பெரும் செல்வந்தனாவான் என்பதைத் தம் பேரறிவால் புலப்படுத்துகிறார். வாசிப்பு என்பது கோப்புகளைக் கையாளும் விதத்தை முற்றிலுமாக மாற்றிவிடுகிறது என்கிற அனுபவப் பேச்சு அசர வைக்கிறது. 
கரூர் புத்தகத் திருவிழாவில் ஆற்றிய 'மகத்தான மௌனம்' என்ற உரை பேரிரைச்சல் நிறைந்த உரையாகப் புலப்படுகிறது. மௌனத்தின் பலத்தையும், பலவீனத்தையும் நமக்கு அடையாளப்படுத்த வரலாற்றின் பக்கங்கள் குறித்து வைத்திருக்கிற தோழமைகளையும் துரோகங்களையும் எடுத்துக்காட்டுகிறது. 'இறுதியில் நாம் நம்முடைய எதிரிகளின் சொற்களை நினைப்பில் வைத்திருக்க மாட்டோம். நம் நண்பர்களின் மௌனத்தைத்தான் நினைவில் வைத்திருப்போம்' என்று மார்ட்டின் லூதர் கிங் குறிப்பிடும்போது அவர் விடுதலைப் போராட்டப் பயணத்தின்போது எதிர்கொண்ட துரோக வலிகளைக் கண்முன்னே நிழலாடச்செய்கின்றது. மௌனம், சப்தங்களுக்கு இடையில் இருக்கிறது. மௌனம், சொற்களுக்கு இடையில் இருக்கிறது. மௌனம், சிந்தனைகளுக்கு இடையில் இருக்கிறது. மௌனம் சிந்தனைகளை உதிர்க்கும்போதே பூரணத்துவம் பெற்று விடுகிறது என்பதை ஒரு மடாலயத்தின் கதை வழியே எளிமைப்படுத்தி, தாகூரின் சிந்தனையால் நம்மை புத்தாடையாய் நெய்துவிடுகிறார் இறையன்பு.
நற்றிணையின் நீர்மச் சுழற்சியும், இலக்கியத் தில் மலர்கள் குறித்த பதிவுகளும், அறத்தைப் பின்பற்றுபவனே உயிர்வாழ்வான் என வள்ளுவம் பேசும்போதும் வியப்புக்கு ஆளாக்கப்படுகிறோம். 
புத்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் நம்மை நெறிப்படுத்துகின்றன. ஜென் துறவிகள் சில இடங்களில் திசைகாட்டிகளாக நிற்கிறார்கள். அசோகரின் தலைக்கதை தலை சுற்றவைப்பதோடு“இந்தத் தலைக்கா இத்தனை ஆட்டம் போடுகிறோம்! எனக் கூனிப் போக வைக்கிறது. வெர்கில் என்கிற கவிஞரின்“பணியே பாராட்டுக்குச் சமம்’ என்கிற பொன்மொழியை வாசித்தபிறகு, சரியாகப் பணி செய்த மறுகணமே, தலைக்குமேல் ஒரு கிரீடம் தானாக முளைத்ததுபோலத் தோன்றிவிடுகிறது.
மதுரையில் பேசிய உரையில் "பல இடங்களிலும் பேசுகிறேன்; அங்கெல்லாம் மூளையிலிருந்து பேசுகிறேன்! இங்கு மட்டும்தான் இதயத்தில் இருந்து பேசுகிறேன்." என்று சொல்லி இருக்கிறார் இறையன்பு. நம்மைப் பொறுத்தவரை 101 உரைகளையுமே இதயத்தில் இருந்துதான் பேசி இருக்கிறார். இன்னும் அழுத்தமாய்ச் சொன்னால், ஒவ்வொருமுறை பேசும்போதும் ஒலிவாங்கிக்கு முன்னால் தம் இதயத்தைத்தான் அவர் நிறுத்தி இருக்கிறார். 
தேனிலே ஊறிய செந்தமிழின் வழியே தம் திறனால், திறமையால், வாசிப்பால், மனித, உயிர்நேய சுவாசிப்பால் மனிதத்தைப் போற்றுகிற இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின் விரலும், குரலும் தொடர்ந்து சுழன்று, சுழன்று இயங்கும்போது,
மனித மனம் பலம் பெறும். 
அழுக்குகள் களை யப்பட்டு, அன்புருக்கள் தோன்றும். 
தேசத்தை நேசத்தால் கட்டி யெழுப்ப இளையோர் அணி திரள்வர்.
இரவு பகலாய் அமர்ந்து வாசித்து முடித்தபோது  அந்த வாசிப்பு அனுபவத்தை இப்படிச் சொல்லலாம். மூளை முட்ட முட்டத் தின்றது மாதிரி இருக்கிறது!